சென்னை அண்ணா அறிவாலயத்தில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் அணிச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர் 80 ஆண்டுகால பொதுவாழ்வு, அரை நூற்றாண்டு காலம் கழகத்தின் தலைமைப் பொறுப்பு, 5 முறை முதலமைச்சர், 13 முறை தேர்தல் களம் கண்டு அனைத்திலும் வெற்றி, ஒரு முறை சட்டமேலவை உறுப்பினர், நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பி, இந்திய அரசியலில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் வழிகாட்டிய மூத்த தலைவர்,
பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தீர்மானித்தவர், இலக்கியவாதி, கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை – வசனகர்த்தா, பத்திரிகையாளர் என இத்தனைப் பேராற்றலையும் ஒருங்கே பெற்ற ஒருவர், நம் தலைவர் கலைஞரைத் தவிர வேறு எவர் இருக்கிறார்? உலகளவில் தேடிப் பார்த்தாலும் இந்தளவுக்குப் பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரைக் காண்பது அரிது என்று தெரிவித்தார்.
மேலும் நூற்றைம்பது ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத் தனது 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்து நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை தி.மு.கழகம் சார்பிலும், அவரது வழியில் நடக்கும் நமது திராவிட மாடல் அரசின் சார்பிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம் என்று தெரிவித்த அவர்,
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல், குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வரை தமிழ்நாடெங்கும் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியவர் கலைஞர் தான்.இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைத்தான், ஒன்றிய அரசுகள் நடைமுறைப்படுத்தின.
இப்போதும் நடைமுறைப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட தலைவரின் வரலாற்றை மறைக்க, திரித்து எழுதும் கூட்டத்திடமிருந்து, உண்மை வரலாற்றை நாம் காப்பாற்றிட வேண்டும் என்றால், திரும்பத் திரும்ப தலைவர் கலைஞரின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் இதே வேளையில்தான், வரும் ஆண்டு கழகத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறோம். எனவே, செப்டம்பர் 17-க்குப் பிறகு, இந்நிகழ்ச்சிகளில் பவள விழாவையும் சேர்த்தே கொண்டாட நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, 2024 ஜூன்-3 அன்று, நூற்றாண்டு நாயகர் கலைஞருக்கு அவர் பிறந்தநாளில் நாம் நன்றிக் காணிக்கை செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்