சென்னை கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீச்சு:
சென்னை பாரிமுனையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டார். சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோயில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கோயில் அர்ச்சகர் கோயிலை திறந்து பூஜைகளில் ஈடுபட்டிருந்த போது, வீரபத்ர சாமி கோயில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை வைத்து நடத்தி வரும் முரளிகிருஷ்ணா என்பவர் சாமி கும்பிட வந்துள்ளார்.
சிறிது நேரத்தில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோயில் உள்ளே சென்று முரளிகிருஷ்ணா வீசியுள்ளார். இதில் உடனடியாக அப்பகுதியில் தீ பற்றி எறியவே கோயில் அர்ச்சகர் உடனே வெளியே ஓடி வந்துள்ளார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால்சாவடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்..
சென்னை, பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி மற்றும் முன் குற்ற வழக்குகளைக் கொண்ட முரளிகிருஷ்ணன் வயது/39, த/பெ.ஜானகிராமன், என்பவர், C-5 கொத்தவால்சாவடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதியப்பாதெரு- கோவிந்தப்பா தெரு சந்திப்பில் உள்ள ஸ்ரீ வீரபத்திரசாமி கோவிலுக்கு நீண்டகாலமாக வந்து செல்பவர்.
இன்று (10.11.2023) காலை 0845 மணியளவில், முரளி கிருஷ்ணன் அதிகமான குடிபோதையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு மேற்படி கோவிலுக்குள் சென்று, கடவுள் சிலையை நோக்கி வீசியுள்ளார்.
உடனே, அவர் பிடிக்கப்பட்டு, விசாரணைக்காக C-5 கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முரளிகிருஷ்ணன் அதிகமான மதுபோதையின் காரணமாக தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில், எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக, இவர் மீது C-5 கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் வெடி மருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.