இன்று முதல் சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகர குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் வரை தான் இருக்க வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேக வரம்பை கடைபிடிப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவது பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழி வகுக்கும். இதனால், வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அதன்படி, இலகு ரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ-ம், கனக ரக வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ-ம், இரு சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ-ம், ஆட்டோ மணிக்கு 40- கி.மீ-ம் செல்ல வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் வரை இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.