தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டிற்கான புள்ளி விவரத்தின் படி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, அதிகபட்ச சாலை விபத்துகள் நடைபெறும் பெருநகரம் சென்னை என தெரியவந்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், நாட்டில் உள்ளில் 53 மெட்ரோ நகரங்களில் பதிவாகியுள்ள 55,400 – விபத்துக்களில், 2021 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர எல்லைக்குள் சுமார் 5,000 வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 15% அதிகம் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி 93% விபத்துக்களுக்கு அதிக வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது காரணம் எனவும் குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் என தெரியவந்துள்ளது.
2021-ஆம் ஆண்டில், கோவிட் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தபோது, தொற்று பரவுவதைத் தடுக்க பேருந்து, ரயில் போன் பொதுப் போக்குவரத்து பல மாதங்கள் தடைசெய்யப்பட்டதால், அதிகமான மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் காலியான சாலைகளில் அதிவேகத்திலும், அவசரத்திலும் வாகனங்களை ஓட்டியது பல விபத்துக்களுக்கு வழிவகுத்ததாகவும், இதில் பலர் உயிரிழந்ததாகவும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய ஆண்டை விட 2021ஆம் ஆண்டில் சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கையில் 15% அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாவது இடத்தில் இருந்தது.
அதே போல் 2020-ஆம் ஆண்டில், மது அல்லது போதைப்பொருள் பயன்பாட்டில் வாகனங்களை ஓட்டியபோது 236 பேர் இறந்தனர். ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர் என சென்னை போக்குவரத்து காவல் துறை புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி தெரிவித்துள்து.
ஏனென்றால், டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டு, மது விற்பனை ஆண்டு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், குடிபோதையில் வாகனம் ஓட்டி – உயிரிழப்பதில் சென்னை நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 41 உயிரிழப்புகளுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் நகரம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.