TN Agriculture Budget | உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்”, “தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை
வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
பத்து ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை கழக அரசு வழங்கி உள்ளது.
இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தொழில் துறை சார்பில் நடைபெறுவதைப் போல வேளாண்மைத் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா,
சங்கமம் போன்றவற்றை நடத்தி வேளாண்மை மீதான ஆர்வத்தைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. ‘உழவர்கள்’ மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை.
தொழில் துறையைப் போல அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மலர்க் கண்காட்சியானது சென்னையில் நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அதனைப் பார்த்து வருகிறார்கள். இவை போன்ற முயற்சிகள், வேளாண்மையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செலுத்தும்.
மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களைப் பாராட்டுகிறேன்.
துறையின் செயலாளர் செல்வி. அபூர்வா இ.ஆ.ப., அவர்களுக்கும், துறை சார்ந்த மற்ற அதிகாரிகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1759881695334191398?s=20
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் உழவர்கள்.
அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. இப்போது மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
அவர்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது.
உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது.
அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது.
இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம்.
மண்ணையும் காப்போம்! மக்களையும் காப்போம்! மண்ணையும் வளர்த்து, மக்களையும் வாழ்விப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.