நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ள (namachivayam) நிலையில், அவரது முதலமைச்சர் கனவு பறிபோயிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வட்டமடிக்கின்றன.
ரங்கசாமியின் மருமகன் என்று அறிமுகம் செய்யப்பட்டு காங்கிரசுக்குள் கால் எடுத்து வைத்தவர்தான் நமச்சிவாயம். மாமாவைப் போலவே அரசியல் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொண்டு காங்கிரஸில் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்து வந்தவர். காங்கிரஸுக்குள் நாராயணசாமிக்கும், ரங்கசாமிக்கும் இடையே ஏற்பட்ட முட்டல் மோதல் காரணமாக, ரங்கசாமி வெளியேறி என்.ஆர். காங்கிரஸ் என்னும் பெயரில் தனிக்கட்சி கண்டார்.
அப்போது நமச்சிவாயமும், ரங்கசாமியின் கட்சிக்கு போய்விடுவார் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்ட நிலையில் அவர் காங்கிரஸிலேயே தொடர்ந்திருந்தார். இதனால் அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவியும் வந்து சேர்ந்தது. மேலும் 2016 சட்டமன்ற தேர்தலில் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் களம் கண்டது.
அப்போது வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டு நமச்சிவாயம் வெற்றி பெற்றார். ஆனால் சொன்னபடி அவருக்கு முதலமைச்சர் பதவி அளிக்காமல், நாராயணசாமியை முதலமைச்சராக்கியதால் அவரது முதலமைச்சர் கனவு தவிடு பொடியானது.
பொதுப்பணித்துறை உள்பட 15க்கும் மேற்பட்ட முக்கிய இலாகாக்கள் நமச்சிவாயத்துக்கு வழங்கப்பட்ட போதும் அவர் மனம் சமாதானம் அடையாததால் அவ்வப்போது கட்சிக்குள் பிணக்குகளும் நிகழ்ந்தே வந்தது. இந்த நிலையில் ஒருவருக்கு இரண்டு பதவி கூடாது என்னும் நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர், பா.ஜகவுக்கு செல்லும்முஸ்தீபுகளில் ஈடுபட்டார்.
இதனால் காங்கிரஸில் இருந்து 20201 ஜனவரி 25ஆம் தேதி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யபப்ட்ட நிலையில் நமச்சிவாயம் தனது எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர், 2021 ஜனவரி 28ஆம் தேதி டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுச்செயலாளர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இதன் பின்னர் 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணியில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய நமச்சிவாயம் வெற்றி பெற்றார். கூட்டணி ஒப்பந்தப்படி பாஜக வெற்றி வேட்பாளர்களான நமச்சிவாயம், ஏ.கே.சாய் ஜே சரவணன் குமார் ஆகியோர் அமைச்சராக்கப்பட்டனர்.
ஏம்பலம் செல்வம் சபாநாயகராக்கப்பட்டார். காங்கிரஸில் ஆசை காட்டப்பட்ட முதலமைச்சர் பதவியை எப்படியும் அடைய வேண்டும் என்னும் இலக்குடன் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்கு வைத்து நமச்சிவாயம் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில்தான் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினராக நமச்சிவாயத்தை பா.ஜ.க மேலிடம் அறிவித்துள்ளது. சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் காவல்துறை ஐ.ஜி., வி.ஜேசந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் கூறப்பட்ட நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியது.
இதன் பின்னணியில் பா.ஜ.க புதுவை மாநிலத் தலைவர் செல்வகணபதி, அமைச்சர் சாய் சரவணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சுவாமிநாதன் மற்றும் மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா இருப்பதாகக் கூறப்படுகிறது.
Also Read : https://itamiltv.com/director-thangar-bachchan-gave-an-urgent-explanation/
ஏற்கனவே முதலமைச்சர் கனவோடு நமச்சிவாயம் காய் நகர்த்தி வருவதோடு எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதற்கான வாய்ப்புகள் கனியலாம் என்பதால், அவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்னும் எண்ணத்தில்தான் அவரை பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக்கி உள்ளனராம்.
இந்த தேர்தலில் நமச்சிவாயத்தை தோற்கடித்துவிட்டால் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவு (namachivayam) கட்டலாம் என்றும் இந்த ஐவர் கூட்டணி பேசிவருவதாக புதுச்சேரி அரசியல் அரங்கில் கிசுகிசுத்து கிடக்கிறது. இதையெல்லாம் ஏற்கனவே ஸ்மெல் செய்துவிட்டதால்தான் , தனக்கு சீட் வேண்டாம் என்று நமச்சிவாயம் புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.