சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்சு மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 கிமீ மேற்கு-தென்மேற்கில் 35 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 11.59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேலும், நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இடிப்பாடுகளில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 230க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லிங்சியா செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் மற்றும் லான்ஜவ் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.