தமிழ் படங்களின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் தான் நடத்த வேண்டும் என தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான FEFSI புது ரூல்ஸ் போட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான FEFSI-ன் கீழ் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெறும் படப்பிடிப்புகளில் FEFSI ஊழியர்கள் தான் பணியாற்றுவார்கள். இப்படி பல முன்னணி நடிகர்கள் படப்பிடிப்பை பெரும்பாலும் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளிநாட்டில் தான் நடத்தி வருகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ் படங்களின் படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் எனவும் வெளிநாடுகளிலோ அல்லது வெளிமாநிலங்களிலோ அவசியமின்றி படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என FEFSI கறார் கண்டிஷன் போட்டுள்ளனர்.
இதுதவிர சமீப காலமாக தமிழ் நடிகர்கள் பெரும்பாலானோர் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்கின்றனர். இதனால், தெலுங்கு நடிகர்கள் அதிகளவில் அப்படத்தில் நடிக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு முடிவுகட்டும் விதமாக தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்களையே பயன்படுத்த வேண்டும் என FEFSI அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளோ அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள்ளோ படப்பிடிப்பை முடிக்காவிட்டால் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு எழுத்துப் பூர்வமாக உரிய பதில் அளிக்க வேண்டும் என FEFSI தெரிவித்துள்ளது.
அதோடு, ஒரு படத்தின் இயக்குனரே அக்கதையின் எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது எனவும், FEFSI அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேற்கண்ட புதிய விதிகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என FEFSI எச்சரித்துள்ளது.