அரியலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவரின் பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக இருந்த நிலையில் தற்போது 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
“அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்விபத்தில் உயிரழிந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.