காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்கு புறம்பான பல காரணங்களை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல எனவும், தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தின் 69.25 டி.எம்.சி. நீர் இருப்பு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) இயல்பான மழைப்பொழிவு அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது.
கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றால் இதற்குத் தீர்வு முடியாததாலும், தமிழ்நாடு அரசு 14.08.2023 அன்று மாண்புமிகுகாணஉச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில்,தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகபடுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், கர்நாடக அரசு மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களுக்கு 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
இத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum), மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் அளிக்க உள்ளார்கள்.
தற்போது, 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதியில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) அறிக்கையின் அடிப்படையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRA) கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்கள் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும்,
CWMA/CWRC அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.