ஆயுதங்களை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோ வெளியிட்ட பிராங்க்ஸ்டர் ராகுலின் (prankstar rahul) மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
“பிராங்க்ஸ்டர் ராகுல்” (prankstar rahul) என்ற யூடியூப் சேனலின் மூலமாக ஆயிரக்கணக்கில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ராகுல். இந்நிலையில், யூடியூப் பிரபலமான ராகுல் சிவகுமாரின் சபதம், பேச்சுலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது ராகுலின் பிராங்க் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துணிக்கடை ஒன்றிற்கு வரக்கூடிய வாடிக்கையாளரிடம் தகராறில் ஈடுபடும் அவர் அவர்களிடம் ஒரு ரவுடியை போல அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ரோகித் குமார் என்ற நபர், இந்த வீடியோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆயுதங்களைக் கொண்டு மிரட்டும் தொனியிலும் அமைந்திருப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ரோகித் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்..
அப்போது பேசிய ரோகித் குமார், “பிரங்க்ஸ்டர் ராகுல்” என்ற பெயரில் இயங்கி வரும் இந்த யூடியூப் சேனலில், ராகுல் என்ற நபர் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களைக் கொண்டு மிரட்டி வருவதாகவும், இதனால் அந்த முதியவருக்கு விபரீதமாக ஏதேனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வெறும் பாலோயர்கள் மற்றும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனவும், ஆயுதங்களைக் கொண்டு முதியவர்களை மிரட்டும் தொனியில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்ட அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இது போன்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களை தடை செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.