”பிரியங்காவும், காங்கிரஸ் தலைவர்களும் ஜனநாயகம் என்ற வார்த்தையை பயன்படுத்த உரிமையில்லை” என பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி சாடியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது வேகமாக மோதியது.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரியங்கா, ‘எந்த உத்தரவும் முதல் தகவல் அறிக்கையும்(FIR) இல்லாமல் கடந்த 28 மணி நேரமாக பாஜக அரசு என்னை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?’ என்று பிரியங்கா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பிரியங்காவும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும், இந்த விஷயம் குறித்து பேசுவதற்கு உரிமையில்லை.
சுதந்திரத்துக்கு பின் விவசாயமும், விவசாயிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.மகாத்மா காந்தியின் கனவான நாட்டின் முக்கியப் பொருளாதாரமான வேளாண் தொழில், பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் அழிக்கப்பட்டது.
நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் உரிமையை இழந்துவிட்டது.
பத்தாயிரம் சீக்கியர்களை உயிரோடு எரித்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அகிம்சையை பற்றிப் பேசுவது பொருத்தமானது அல்ல. காங்கிரஸ் தலைவர்கள், கட்சியினர் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கி, வளர்த்துக் கொள்வதோடு,மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, விவசாயிகள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.