தெலுங்கானாவில் சோனியா காந்தியை பாரத மாதா போலச் சித்தரித்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள துக்குகுடாவில் நடைபெற உள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு,
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பிற தலைவர்களின் கட்அவுட்களுடன் சேர்த்து சோனியா காந்தியை பாரத மாதா போலச் சித்தரித்து கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்அவுட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்அவுட்டில் சோனியா காந்தி பாரத மாதா தோற்றத்தில் தலையில் கிரீடம், கையில் காங்கிரஸ் கொடி ஏந்தி இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த கட்அவுட்க்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கூறுகையில்,
“இந்தியாவை அவமதிப்பது காங்கிரசுக்கு எப்போதும் வழக்கமாக உள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பி.டி.கல்லா சோனியா மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பினார். இப்போது சோனியா காந்தியை பாரத மாதாவாகப் பார்க்கிறார்கள்.
சோனியா காந்தியின் கட்அவுட், அவர்களுக்கு நாட்டை விட காங்கிரஸ் குடும்பம் தான் பெரியது என்றும் கருதுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
https://x.com/MeghUpdates/status/1703462191855476990?s=20