நடிகை குஷ்பு ‘சேரி’ குறித்து தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(evks elangovan) தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடில் வீட்டுவசதித் துறை அமைச்சர் திரு சு. முத்துசாமி அவர்களின் உதவியாளர் முகமது அயூப் அலி ரிஜ் வானா பர்வீனா ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டகாங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில், தமிழகம் – புதுச்சேரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக அரசு நிறைவேற்றிய மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால், முதல்வர் பின்னால் பெண்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.
சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் நடிகை குஷ்பு ‘சேரி’ மொழி என்று பேசியது குறித்த கேள்விக்கு, அவர் கருத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், அவரது பேச்சின் முழு விவரம் தெரியவில்லை, என்றார்.