நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் நிர்வாகிகளை மாற்றும் வேலையில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் தலைவர் பதவிக்கு சீனியர்,ஜூனியர் என முந்தியடித்துக்கொண்டு போட்டிப்போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
புதுச்சேரியில் பல ஆண்டுகளாய் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. மொத்தம் உள்ள 30 எம்எல்ஏக்களின் இரண்டு பேர் மட்டுமே காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தோல்வியை தழுவினார்கள்.
ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியின் பலம் புதுச்சேரியில் பெருமளவில் குறைந்துவிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக கட்சிக்கு புதிய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் மாநில தலைவர் பதவியைப் பெறுவதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக சீனியர் ஜூனியர் இடையே போட்டி நிலவுகிறது. கட்சியின் சீனியர் தலைவர்களான முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, தற்போதைய எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இதே போல் ஜூனியர் தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோரும் களத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சீனியர் தலைவர்களான முன்னாள் முதல்வர் நாராயணசாமி,வைத்திலிங்கம் எம்பி, தற்போதைய தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் இரண்டாவது நாளாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஆனால் இதற்கு முன்பே ஜூனியர் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை குறித்தும் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியில் மாநிலத் தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்கு கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் விரைவில் புதுச்சேரிக்கு வர உள்ளதாக தெரிகிறது.
அப்போது மூத்த உறுப்பினருக்கு பதவி கிடைக்குமா அல்லது புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும என்பது தெரியவரும். இதனிடையே புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் ஆய்வு நடத்தி காங்கிரஸ் தலைமைக்கு அறிக்கை கொடுத்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.