ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்காததை கண்டித்து நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுநல கூட்டமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த பெல் நிறுவன வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பெல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவையை நிர்வாகத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மற்ற வேலைகளுக்கு ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்கவில்லை என கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில், சில ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனிடையே மருத்துவமனை ஊழியர்களை நிர்வாகம் செய்ய திருச்சி ஜி.வி.என் மருத்துவமனைக்கு புதிதாக ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை சார்பில் அனைத்து ஊழியர்களுக்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது. அதில் எழுத்து தேர்வில் கலந்துகொண்ட அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எழுத்து தேர்வு நடைபெற்ற போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் எழுத்து தேர்வு எழுதவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. அவர்கள் கடந்த 2 மாதமாக வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் 16பேருக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பெல் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், பொதுநல கூட்டமைப்புகள், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்து இருந்தது. அறிவிப்பின் அடிப்படையில் இன்று காலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி தலைவர் கோபி தலைமையில் பெல் பயிற்சி மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பெல் பயிற்சி மையத்தின் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.