தமிழ்நாட்டில் வரும் நவ. 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பல புதிய தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் கணிசமாக குறைவடைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 -ம் வகுப்புகள் வரை சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படவும், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை தவிர பிற மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையே சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளில் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சிகிச்சைக்கு நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேவையான பணியாளர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகள் நடத்தவும், அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.