பிரமதர் குறித்து விமர்சிப்பவர்கள் 3 மாத குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனரும்,நடிகருமான பாக்யராஜ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
’’பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022’’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் பாக்யராஜ், பாஜக தலைவர் அண்ணாமலை, பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த விழாவில் பிரதமர் மோடி குறித்து பாக்யராஜ் பேசியிருந்தார்.
இந்த விழாவில் பேசிய அவர்;
“எங்கு வெளிநாடு சென்றாலும் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். எத்தனை பேர் இந்த வயதில் துடிப்புடன் இருப்பார்கள் என்பது சந்தேகம். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை.பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இப்படிபோன்றவர்கள் நல்லதையும் பேசமாட்டார்கள். பிறர் சொல்வதையும் கேட்கமாட்டார்கள். குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாய், காது இருக்காது. எனவே அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
அது போல் விமர்சனங்கள் செய்பவர்களுக்கு நல்லது சொன்னாலும் காது கேட்காது, அதை பற்றி பேசவும் மாட்டார்கள். அண்ணாமலை இங்கிருந்து கர்நாடக சென்று சிறப்பாக பணியாற்றியதாக சொன்னார்கள். நான் கர்நாடகா சென்றிருந்த போது அவரைப்பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது பாராட்டப்பட வேண்டியது. பாஜகவுக்கு சரியான ஆளைத்தான் தலைவராக போட்டுள்ளனர்’’ என இயக்குனர் பாக்யராஜ் பேசினார்.
ஏற்கனவே இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியது குறித்து விமர்சனங்கள் ஓயாத நிலையில் தற்போது பாக்யராஜும் இவ்வாறு பேசியிருப்பது சமுக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.