கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் மகசூல் இழப்பு குறித்து காப்பீடு நிறுவன ஊழியர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் காப்பீடு நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 3,70,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவம் தவறிப் பெய்த கன மழையின் காரணமாக ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டன.33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிவாரணம் போதுமானது அல்ல என்றும் மேலும் பயிர்க் காப்பீடு நிறுவனம் கனமழைக்கு முன்பாகவே சில கிராமங்களில் தங்களது நான்கு கட்ட ஆய்வை முடித்து விட்டதால் மீண்டும் அந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கடந்த திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் பயிர்க் காப்பீடு நிறுவனம் வேளாண்மைத் துறை புள்ளியால் துறை ஆகிய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அதன் அடிப்படையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் 76 கிராமங்களில் மீண்டும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மறு ஆய்வு செய்யும் பணி என்பது தொடங்கியுள்ளது. இதில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் வேளாண்மைத் துறை புள்ளியில் துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் நில உரிமையாளர் அல்லது குத்தகைக்காரர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் பகுதியில் நடைபெற்றது.இதில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் வேளாண் துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் ஏற்பட்டுள்ள மகசூல் இழப்பு குறித்து காப்பீடு நிறுவனம் ஆய்வு செய்தது.அதன் அடிப்படையில் விளைநிலங்களில் குறிப்பிட்ட பகுதியை அளந்து அதில் உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்து அதில் கிடைக்கும் நெல்மணிகளை எடை போட்டுப் பார்த்து அதன் அடிப்படையில் மகசூல் இழப்பு குறித்த ஆய்வை காப்பீடு நிறுவனம் கனமழைக்குப் பிறகு திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்தி வருகிறது.
இந்த பணிகள் தற்போது திருப்பத்தூர் மாங்குடி கேக்கரை வடகால் வேப்பத்தாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இதில் நான்கு கட்ட ஆய்வு முடிந்த இடத்தில் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் நான்கிற்கும் குறைவாக ஆய்வு நடந்த இடங்களில் தற்போது ஆய்வுப் பணியில் காப்பீடு ஊழியர்கள் வேளாண் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.