அரபிக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிரப் புயலாக நாளை மாறி, ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே 25ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..
தேஜ் புயலானது மும்பையை தாக்கக்கூடும் என்று முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது புயலானது ஓமன் நோக்கி நகர உள்ளது.
மும்பையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள தேஜ் புயல் அதிகன மழையையும் பயங்கர சூறாவளியையும் உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேஜ் புயலினால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இது குறித்த கூடுதல் தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.
இதனிடையே கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை நாளைய தினம் தொடங்கும். வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அது வலு குறைந்து காணப்படும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.