திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக்கடையில், சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பிரதான நுழைவாயில் அருகே பொதுமக்கள் கூடும் இடத்தில் உள்ள டீக்கடையில், காலை பலகாரம் சுடுவதற்காக சிலிண்டர் பற்ற வைக்கப்பட்ட போது திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது. குறித்த டீக்கடையில் பற்றிய தீ அருகில் இருந்த 5 கடைகளுக்கு மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த 12க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தில் டீக்கடை பணியாளர் ஒருவரும், டீ குடித்துக்கொண்டிருந்த மாநகராட்சி பணியாளர் அல்போன்ஸ் என்பவரும் படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் காய்கறிகள் வாங்குவதற்காக வரும் மக்கள் சாலையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை பாதுகாப்பு கருதி கலைந்து செல்லும்படி காந்தி மார்க்கெட் காவலர்கள் அறிவுறுத்தினர்.
இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.காந்தி மார்க்கெடில் உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்து, 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.