டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் டான்ஸ் ரமேஷ் (dancer ramesh). இவர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்ஸ்டகிரம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷ் (dancer ramesh) சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான “துணிவு” திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தால் தனது பகுதியில் நடக்கும் விழா மேடைகளில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார்.இதனையடுத்து, நடனம் கற்றுக்கொண்டு நல்ல டான்சரான ரமேஷ் சினிமா வாய்ப்பு கேட்டு சில ஆண்டுகள் முயற்சி செய்திருக்கிறார்.
இந்த நிலையில் அவருக்கு பட வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் அந்த முயற்சியைக் கைவிட்டு மூர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் கடையை நடத்தி வந்துள்ளார்.இதனிடையே, நண்பர்களின் உதவியுடன் சினிமா பாடல்களுக்கு நடனமாடி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் ரமேஷ்.
இதனிடையே, இவரது நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் வரவேற்பையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. மேலும், சமூக வலைதளங்களில் பிரபலமானதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் ரமேஷுக்கு வந்தன.
எச் வினோத் இயக்கத்தில் வெளியான ‘துணிவு’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த டான்ஸர் ரமேஷ், நெல்சன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் வசித்து வந்த புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும், டான்ஸர் ரமேஷின் தற்கொலை குறித்த விசாரணையில், தனது பிறந்த நாளன்று முதல் மனைவியை பார்க்க சென்ற இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,பிறந்த நாளன்றே அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் டான்ஸர் ரமேஷின் தற்கொலை குறித்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரது மரணத்தில் சதேகம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அவரது மனைவி i tamil தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.