அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவர் நாட்டு பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக இருந்த நிலையில் தற்போது 10ஆக உயர்ந்துள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வெடி விபத்தில் 9 இருசக்கர வாகனங்கள், ஒரு டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஆலையின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மீட்கட்ட நிலையில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதையடுத்து, எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் வெற்றியூர் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்த விபத்தில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை விபத்தால் வெற்றியூர் கிராமம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.