திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐ.பி.எஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“அனைவருக்கும் வணக்கம்.
நான் வருண்குமார் வீரசேகரன் IPS. பல் மருத்துவருக்கான படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறை மேல் உள்ள பற்று காரணமாக 2010-ம் ஆண்டு UPSC குடிமைப்பணிகள் தேர்வு எழுதினேன். அதில், அகில இந்திய அளவில் 3-ம் இடத்தை பிடித்திருந்தாலும், IPS-ஐ தேர்ந்தெடுத்தேன்.
தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஒரு வருடமாக பணிபுரிகிறேன். எனது 13 ஆண்டுகால IPS வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிளும் Outstanding Rating மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளேன்.
2021-ம் ஆண்டு YouTuber ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த YouTuber-ஐ கைது செய்து, பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.
சமீபத்தில், அதே YouTuber பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் Cyber Crime காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த YouTuber சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார். விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது.
எனவே. அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் அனுப்பினேன். ஒருங்கிணைப்பாளருக்கு நான் சட்டப்படி இந்த Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் X தளத்தில் பரப்பினர்.
இதையும் படிங்க : த.வெ.க கொடி சர்ச்சை : விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!!
ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்?..
இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி.” எனத் தெரிவித்துள்ளார்.