அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கின்போது, கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது, தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டடு, தமிழ் முறைப்படி குடமுழுக்கு சடங்குகள் நடைபெற்றதற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் இந்து சமய அறநிலையத்துறைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பதாவது..,
“சேலம் மாநகரத்தின் காவல் தெய்வமாக மக்களால் போற்றி வணங்கப்படும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலுக்கு 2023 அக்டோபர் 27 அன்று திருக்குடமுழுக்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்து, அத்திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், சேலம் – மேச்சேரி தமிழின குருபீடம் – சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்குக் கோரிக்கை வைத்தார்.
கடந்த 25.08.2023 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அளித்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழின ஆச்சாரியார் கூட்டமைப்பு, நாம் தமிழர் கட்சி, தமிழ்க் குடமுழுக்குக் கூட்டியக்கம், தமிழ்க் கலாச்சாரப் படிப்பு வட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
இந்நிலையில், கடந்த 25.10.2023 அன்று பகலில், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலின் நிர்வாக அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழு, செயல் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், இக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் நேரில் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தமிழ் மந்திரங்கள் ஓதி தாங்கள் தரும் புனித நீரையும் குடமுழுக்கில் பயன்படுத்த வேண்டுமெனக் கோரினார். இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து, நேற்று காலை, ஐயா சித்தர் மூங்கிலடியார் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம், சிம்மம் சத்தியபாமா அம்மையார் (சத்தியபாமா அறக்கட்டளை அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம், மேச்சேரி) ஆகியோர் சித்தரடியார்கள், சன்னிதானங்கள் புடைசூழ, கோட்டை மாரியம்மன் குடமுழுக்கில் பயன்படுத்த வேண்டி, தமிழ் மந்திரங்கள் ஓதி உருவாக்கப்பட்ட புனித நீரை, ஊர்வலமாக எடுத்துச் சென்று கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறும் வேள்விச் சாலையில் வைக்கும் புத்துயிர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கின்போது, கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது, தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன.
அதேபோல் அமைக்கப்பட்டிருந்த 23 வேள்வி குண்டங்களில் 1 குண்டம் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு பூசகர்கள் தமிழ் மந்திரங்கள் ஓதி, தமிழ்வழிச் சடங்குகளை மேற்கொண்டனர். திருக்கோயில் திருக்குடமுழுக்கில் தமிழ் மந்திரங்களே ஒலிக்கப்பட வேண்டுமென்ற நமது கோரிக்கையில், இது ஒருபடி முன்னேற்றமே என வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசு, இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் திருக்கோயில் குடமுழுக்குகளிலும் வேள்விச் சாலை – கலசம் – கருவறை ஆகிய மூன்று நிலைகளிலும், சமற்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு இடமளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.