இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவிட்ட மற்றும் அரசுக்கு எதிராக பதிவிட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழுத்தம் கொடுத்தாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020-2021 ஆம் ஆண்டு எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டங்களுக்கு மத்தியில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோரிக்களை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து பஞ்சாபில் தொடங்கிய போராட்டம் டெல்லியில் மாபெரும் போராட்டமாக மாறியது.இந்த போராட்டத்தில் இந்தியாவின் பஞ்சாப் ,உத்திரபிரதேசம் தமிழ்நாடு, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் 3 வேளாண் சட்டங்களைக் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில்விவசாயிகளின் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது. இந்த போராட்டத்தை செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தாலும் ட்விட்டரில் இந்திய அரசுக்கு எதிராக பல பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்ததால் அவர்களது ட்வீட்டுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி பகீர் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அண்மையில்,ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை டிவிட்டரில் இருட்டடிப்பு செய்ய வேண்டும்.மத்திய அரசை விமர்சித்து பத்திரிகையாளர்கள் போடும் ட்வீட்களையும் திசை திருப்பு செய்ய வேண்டும் என்று இந்திய அரசால் நாங்கள் மிரட்டப்பட்டோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசை எதிராக போடப்படும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும்.இல்லையென்றால் டிவிட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் என மிரட்டினார்கள்,மேலும் சிலரது வீடுகளில் ரெய்டும் நடந்தது. அவர்கள் சொன்னதை நாங்கள் செய்தோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என கூறிவிட்டு டோர்சி சிரித்தார். தற்பொழுது இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.