நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கேரளாவில் பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 8ஆம் தேதிக்குப் பின்னர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இந்த நிலையில் கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறையிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.