பல முனைகளிலும் இன்று அதிமுகவை தாக்கிக் கொண்டுள்ளனர். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி வருவதாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது :
அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினோடு விவாதத்திற்கு தயார் என்றார் ஈ.பி.எஸ். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நான் வருகிறேன் என்கிறார். சிங்கமும், எலிக்குட்டியும் ஒன்றா?
முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்சுக்கு துரோகம் செய்தது சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தான்.
பின் சசிகலா முதல்வராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால், கடவுள் அருளாசி இருந்ததால்தான் ஈ.பி.எஸ் முதல்வரானார்.
அதிமுகவில் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும். ஏனெனில் ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது.
அம்மாவின் உதவியாளராக வந்த சசிகலா, பல மாவட்டங்களில் கோடீஸ்வரர்களை உருவாக்கிய சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆசைப்பட்டார். ஓ.பி.எஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆசைப்பட்டார். இப்போது இருவருமே செல்லாக்காசு என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.