பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் சம்மந்தியும், இயக்குனர் ஹரியின் தந்தையுமான வி.ஆர்.கோபாலகிருஷ்ணன் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் ஹரி, சென்னைக்கு வந்து இயக்குனர் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர் ஜான், நாசர் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்னர், நடிகர் பிரசாந்த் – சிம்ரன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம் – திரிஷா நடிப்பில், ஹரி இயக்கிய ‘சாமி’ , கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்தது.
இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் கிராமத்து சாயல் இருப்பது இவரின் தனி சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. கடைசியாக அருண் விஜயை வைத்து ‘யானை’ படத்தை இயக்கிய ஹரி, தற்போது விஷாலின் 34-ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஹரியின் தந்தை வி ஆர் கோபாலகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக காலமான சம்பவம், ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை… இறுதி சடங்குகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவரது மறைவிற்கு திரையுலகினரும், விஜயகாந்த் உடள்பட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.