வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டு தேர்தல் திருவிழாவுக்கு பந்தக்கால் நட்டுள்ளது திமுக.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக,
கொகதேக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு பகிந்து கொடுத்து விட்டு, மீதமுள்ள 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது திமுக.
அதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
ஆனால், இதுவரை இல்லாத வகையில் எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி என்பது போல 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்களை இந்த முறை களமிறக்கி இருக்கிறது திமுக தலைமை.
அவர்களில் ஒரு சிலரைத் தவிர பலரும் அந்தந்த தொகுதி திமுகவினரிடமே கூட அதிக அறிமுகம் இல்லாத, புத்தம் புதியவர்கள் என்பதுதான் ஹைலைட்டே..!
தற்போது திமுக வெளியிட்டுள்ள அந்த பட்டியலின் படி,
தஞ்சாவூரில் போட்டியிடும் முரசொலி, தென்காசியில் போட்டியிடும் டாக்டர் ராணி, ஆரணியில் போட்டியிடும் தரணி வேந்தன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி, சேலம் செல்வ கணபதி,
பெரம்பலூர் அருண் நேரு, ஈரோடு பிரகாஷ், கோவை கணபதி ராஜ்குமார், கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் என இந்த அறிமுக வேட்பாளர்களின் மறுமுகம் பற்றி இப்போது பார்க்கலாம்..
- தஞ்சை வேட்பாளர் ச. முரசொலியைப் பற்றி இப்போது பார்ப்போம்.
“முரசொலி” – கலைஞர் மு.கருணாநிதியால் துவங்கப்பட்ட முன்னேற்ற கழகத்தின் அதிகாரபூர்வ கட்சி பத்திரிகையின் பெயரே இவரது பெயராகவும் இருப்பதால், பாரம்பரிய திமுக காரர் தான் என்பதை அவர் பெயரே சொல்லி விடுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி என்ற கிராம்ம் தான் இந்த புதுமுக வேடாளரான ச. முரசொலியின் சொந்த ஊர்.
வயது – 44 , வழக்கறிஞர்.
பட்டப்படிப்பை தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரியிலும், சட்டப் படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்ட பல்கலைக் கழகத்திலும் பயின்றனர்.
இவரது குடும்பம் பாரம்பரியமான திராவிட குடும்பம் எனக் கூறப்படுகிறது.
முரசொலியின் தாத்தா கந்தசாமி நாட்டார் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராக இருந்தவர்.
முரசொலியின் தந்தை கே. சண்முகசுந்தரம் 1971 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவராக பதவி வகித்தவர்.
இது அவரின் குடும்பம் குறித்த அரசியல் விபரங்களாக இருந்தாலும், வேட்பாளர் முரசொலியும் அவர்களோடு அரசியலில் பயணித்தவர் தான்.
கடந்த 2004 முதல் தென்னகுடி ஊராட்சி பிரதி நிதியாக இருந்திருக்கிறார் வேட்பாளர் ச. முரசொலி
2006 முதல் 2011 ஆகிய 5 ஆண்டு காலம் தஞ்சாவூர் ஒன்றிய குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்த இவர், அதன் பிறகு, 2014 முதல் திமுக பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
2020 ஆம் ஆண்டு தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுகவின் 15ஆவது அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்று தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் முரசொலி.
இளைஞர் , படித்தவர், வழக்கறிஞர் என்ற முறையிலும், பாரம்பரியமான திமுக குடும்பத்தை சார்ந்தவர், தொடர்ச்சியாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருபவர் போன்ற பல காரணங்களாலும் இந்த மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப் பட்டிருக்கிறார் ச. முரசொலி.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை நடந்த 6 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக பணியாற்றிய,
தஞ்சாவூரின் சிட்டிங் எம்.பி. எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கே இம்முறை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் முதன் முறையாக எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளரான ச.முரசொலி..!
- அடுத்ததாக தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி.
தென்காசி தனி தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் ராணியும் பாரம்பரிய திராவிட குடும்பத்தை சேர்ந்தவர் தான்.
பூர்வீகமே சங்கரன் கோவில்தான். அங்குள்ள என்.ஜி.ஓ. காலனியில் தான் குடியிருப்பு
எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த அரசு மருத்துவர்.
தற்போது சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவரின் தாத்தாவான பி. துரைராஜ் கடந்த 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சங்கரன் கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
ஆனாலும், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகியபோது அவரும் விலகி அதிமுகவில் இணைந்தார்.
அதன் பின்னர், 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே சங்கரன் கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி சட்டமன்றம் சென்றார் ராணியின் தாத்தாவான பி.துரைராஜ்.
திருமணம் ஆகி விட்டது. கணவரின் பெயர் ஸ்ரீ குமார். 14 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவரது கணவரான ஸ்ரீகுமார் மிகப் பெரிய பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை எடுத்து செய்யும். ஏ-1 அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். மேலும், திமுகவின் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராகவும் இருக்கிறார்.
பூர்வீகமே சங்கரன் கோவிலாக இருப்பதாலும், மருத்துவராக இருப்பதாலும் அந்த தொகுதி மக்களுக்கு ஓரளவு அறிமுகமானவாராக இருக்கிறார் டாக்டர் ராணி.
ஆனாலும், அவரது கணவர் ஸ்ரீகுமாரின் முயற்சியினால் மட்டுமே அரசியலில் குதித்திருக்கும் இவர் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக உறுப்பினராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
“பணத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம்லே..” என இப்போதே ஸ்வீட் சாப்பிட தயாராகி விட்டார்கள் தென்காசி வாக்காளர்கள்
- ஆரணி தரணி வேந்தன் :
திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர்.
அரசியல் தவிர கட்டுமாணம் உட்பட சில தொழில்களில் நல்ல லாபத்தை குவிப்பவர். விவசாயமும் உண்டு.
அமைச்சர் எ.வ. வேலுவுக்கு நெருக்கமானவர்.
திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல்கள் இருந்தாலும், இளைஞர் என்ற முறையிலும் கடுமையாக கட்சிப் பணியாற்றக் கூடியவர் என்ற வகையிலும் தரணி வேந்தனுக்கு இம்முறை சீட் தந்துள்ளது திமுக தலைமை.
- பொள்ளாச்சி ஈஸ்வரசாமி :
சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் மைவாடி கிராமம். இருப்பது, பொள்ளாச்சி அருகில் உள்ள மடத்துக்குளம்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர்.
நூற்பாலையில் பணியாற்றி, சைடு பிஸினசாக ஃபைனான்ஸ் தொழிலில் இறங்கியவர். இவர் துவக்கிய சுபம் ஃபைனான்ஸ் இவரை கைதூக்கி விடவே, கையில் கிடைத்த பணத்தை வைத்து டிவிஎஸ் உட்பட பல பிரைவேட் நிறுவங்களின் ஒப்பந்த்ங்களை எடுத்து வளம் கொழிக்க துவங்கியவர்.
இன்று பல தொழில்களுக்கு சொந்தக்காரர். அரசு உதவி பெறும் பள்ளி மூலம் கல்விப் பணியும் ஆற்றி வருகிறார் ஈஸ்வரசாமி.
2006ல் திமுகவில் இணைந்த ஒரே வருடத்தில் 2007 ம் ஆண்டு மடத்துக்குளம் கருப்புசாமி புதுார் கிளைக் கழகத்தின் ஒன்றிய பிரதிநிதியாக பொறுப்பு வழங்கப் பட்டவர். அடுத்து கவுன்சிலர், 2019 இல ஒன்றியக்குழு துணைத் தலைவர்.
தற்போது மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருக்கிறார் ஈஸ்வரமூர்த்தி. இவரின் மனைவி லதாப்ரியா மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார்.
இதுவரை தொழிலில் தன்னை உயர்த்திய அதே உழைப்பு.. அரசியலிலும் தன்னை உயர்த்தும் என நம்பும் ஈஸ்வரசாமிக்கு முதன் முறையாக தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
- அடுத்து சேலம் செல்வகணபதி :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர் / இருப்பவர்
1991 ஆம் ஆண்டு முதன் முறையாக திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஆன இவருக்கு அப்போதே ஊரக நிர்வாக துறை அமைச்சராக ஆக்கப்பட்டவர்.
1999 ஆம் ஆண்டு சேலம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
ஆனால், 2008ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தவர். அந்த காரணத்திற்காக மட்டுமே செல்வகணபதி மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டதாக அவ்ப்போது பேச்சு எழுந்தது.
2010 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியான இவர் மீது சுடுகாட்டு கொட்டகை அமைப்பதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அது நிரூபிக்கப்பட்டு பதவியையும் இழந்தார் செல்வகணபதி.
அதன் பிறகு அரசியல் அமைதியாக இருந்தாலும், சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக டஃப் ஃபைட் கொடுக்கும் அளவுக்கு தனக்கான ஆதரவாளர்களை எப்போதுமே வைத்திருப்பவர்.
அந்த காரணத்தால் தான் கால் நூற்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டில் இவரை கொண்டு வந்திருக்கிறது திமுக தலைமை.
- பெரம்பலூர் அருண் நேரு :
திமுகவின் பவர் சென்டரான திருச்சி அமைச்சர் நேருவின் ஒரே மகன் தான் அருண் நேரு.
இதுவரை கட்சிப் பொறுப்பு எதுவும் இல்லாவிட்டாலும் கூட, நேருவுக்கு நிகராகாவரது ஆதரவாளகளால் மதிக்கப்படுபவர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் கட்டுமான மேலாண்மைத் துறையில் எம்.எஸ். பட்டம் படித்தவர்.
அமைச்சர் நேருவின் விவசாயம், அரிசி ஆலை உள்ளிட்டவற்றை நிர்வாகம் செய்து வருபவர்.
திருச்சியின் அரசியல் மையமாக வலம் வந்த அமைச்சர் கே.என். நேருவுக்கு திமுக தலைமை மாநில பொறுப்பு தரவே,
கடந்த சில ஆண்டுகளாக பிறந்த நாள் போஸ்டர்களில் தலைகாட்ட துவங்கி தற்போது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக திமுக தலைமையால் களமிறக்கப் பட்டிருக்கிறார் அருண் நேரு.