உலகம் முழுவதும் கொரோனா தொற்று தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், தற்போது புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
மகாராஷ்டிராவில், கேரளாவில் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலும் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில் சென்னையில் புதியவகை கொரோனா பரவுவது உறுதியாகி உள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ்தான் உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. சத்யசாய் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கொரோனா பரவல் ஏற்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
ஐ.ஐ.டி., சத்யசாய் பல்கலையில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. அண்ணா பல்கலை, வி.ஐ.டி. பல்கலை கழகங்களில் சிகிச்சையில் இருப்பவர்களும் அடுத்த ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். 150 மாதிரிகள் ஐதராபாத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் சோதனை செய்யப்பட்டதால் பி.டி.-4, வகை கொரோனா தொற்று 4 பேருக்கும் பி.ஏ.-5 வகை 8 பேருக்கும் உறுதியாகி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா நாவலூரில் ஒரே ஒருவருக்கு காணப்பட்டது. அவர் குணமடைந்துவிட்டார்.
இப்போது தொற்று கண்டறியப்பட்டுள்ள 12 பேரும் தனியாக வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள். தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. ஒமைக்ரானில் 7 வகை உள்ளது. அதில் இந்த 2 புதிய வகையும்தான் தமிழகத்தில் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டது. இவை பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர் ஆபத்து எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. விழிப்புடன் இருந்தால்போதும். இவ்வாறு அவர் கூறினார்.