கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரெஸ்வு என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள், பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும், இதன் விலை ரூ.350 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த மாதம், இந்த கண் சொட்டு மருந்துக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்றதொரு சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
Also Read : திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரிப்பு – ஓபிஎஸ்
இந்த சொட்டு மருந்தானது 1.25 சதவீதம் பைலோகார்பைன் ஹைட்ரோகுளோரைட் கொண்டிருக்கிறது. பைலோகார்பைன் என்பது, தாவரத்திலிருந்து எடுக்கக்கூடியது, இது பல ஆண்டு காலமாக, பல்வேறு கண் பிரச்னைகளுக்கும், வறண்ட வாய் மற்றும் உதடு, கண் அழுத்தக் குறைப்பு போன்ற சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இயற்கையாகவே கண் பார்வை குறைபாடு ஏற்படும் ப்ரெஸ்பியோபியாவுக்கு இந்த மருந்து பலனளிக்கும் என கூறப்படுகிறது.
இந்த மருந்தினை, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் என்டோட் ஃபார்மாகியூடிகல் நிறுவனம், உருவாக்கி, பிரெஸ்வு என்ற பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதுபோன்றதொரு கண் சொட்டு மருந்து அமெரிக்காவிலும், கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியைப் பெற்று அறிமுகப்படுத்தப்பட்டது. உய்டி என்று பெயரிடப்பட்ட அந்த மருந்து, வயதானவர்களுக்கு ஏற்படும் மங்கலான பார்வையை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கண் சொட்டு மருந்துக்கான ஆராய்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், இந்திய மக்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதி பேருக்கு கண்பார்வை குறைபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.