“போதையில்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடத்திட தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..
“தமிழ்நாடு அரசு போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் பல்வேறு போட்டிகளை நடத்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் இடையே புகையிலைப் பொருட்கள் மற்றும் மது மீது நாட்டம் ஏற்படுவதை தடுப்பது அரசின் நோக்கமாகும்.
மது போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினர் இடையே சிந்திக்கும் திறன்களை குறைத்து, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்திட காரணமாக அமைந்திடும்.
இதையும் படிங்க : சேலத்தில் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்!
எனவே, போதையின் தீமைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் “போதையில்லா தமிழ்நாடு” என்கிற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் ஆகிய போட்டிகள் நடத்திட முன்வந்துள்ளது.
இப்போட்டிகளில், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டு தங்கள் சுயமான கற்பனையில் உருவான படைப்புகளை நவம்பர்-15ந் தேதிக்குள் tndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் அனுப்பிவைக்கும் படைப்புகளில் சிறந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பார்.” எனக் கூறப்பட்டுள்ளது.