திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ(durai vaiko) போட்டியிடுவதாக மதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இந்த தேர்தல் பாஜகவுக்கு சவாலான தேர்தலாக இருக்குமென்றும் இந்தியா கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற மதிமுகவினர் பணியாற்றுவார்கள். அதே நேரம் திருச்சி தொகுதியில் நான் நிற்க வேண்டும் நிர்வாகிகளும் இயக்கத்தினரும் வற்புறுத்தியதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தில் அதிகாரத்துக்கு யார் வரவேண்டும்? யார் வரக்கூடாது என்பதுதான் இந்த தேர்தலில் முக்கியப் பிரச்சினை. முதலமைச்சர் அண்ணன் தளபதி இதனை பலமுறை சுட்டிக் காட்டி உள்ளார். மதவாத பாரதிய ஜனதாவுக்கு தேர்தலில் மறுபடியும் வாய்ப்பு அளித்துவிடக்கூடாது. இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கு எதிராகச் செயல்படும் மதவாத பா.ஜ.க தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான் கூட்டணியின் கருத்து.
கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மக்கள் பிரச்சனைகள், தவறான பொருளாதாரக் கொள்கை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இதனால் பொருட்களின் விலை உயர்வு பா.ஜக முன்னெடுக்கும் மதவாத பிரச்சனைகள்,
மதவாத அரசியலுக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான அரசியலுக்குமான போட்டிதான் இந்த தேர்தலின் பிரச்சாரமாக உள்ளது
சின்னம் கிடைக்கும் வரை காத்திருக்காமல் இப்போதே தேர்தல் பிரசாரத்தை இந்த செய்தியாளர் சந்திப்பு வழியாகவே தொடங்கிவிட்டோம். சமூக ஊடகங்கள் மற்றும் செல்போன் வழியாக சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்..
திமுக, மதிமுக, திக, அண்ணா திமுக என திராவிட இயக்கங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இன்று பா.ஜ.கவை எதிர்க்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜ.க அரசியல் தீண்டத்தகாதவர்கள் (பொலிட்டிக்கல் அண்டச்சபுள்). அவர்களுக்கு மக்களிடமும் அரசியல் இயக்கங்களிடமும் ஆதரவு கிடையாது. வேற வழியில்லாதவங்கதான் பா.ஜ.க தலைமையிலான அணியில் சேர்கிறார்கள்.
பா.ஜ.கவுடன் அதிமுகவுக்கு தொடர்பு இல்லை என்பதை மக்கள் நம்பிய பிறகு அரசியல் கட்சிகளும் நம்புவார்கள். தேர்தல் முடிந்தபிறகு பா.ஜ.கவுடன் அவர்கள் சேரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அதனால் வரும் காலங்களில் அதிமுகவைப் பொறுத்தவரை இதே நிலைப்பாட்டுடன், மதவாத பா.ஜ.க தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்னும் நிலைப்பாட்டோடு இருப்பதை எடப்பாடி கே.பழனிசாமி காலப்போக்கில் உறுதி படுத்த வேண்டும்.
வாரிசு அரசியலைப் பேசவேண்டிய அருகதை பா.ஜகவுக்கு கிடையாது. கர்நாடகாவில் பா.ஜக முதலமைச்சர் வாரிசுதான். ஆந்திராவில் பா.ஜ.க மாநிலத் தலைவரும் வாரிசுதான். மகராஷ்டிராவின் துணை முதல்வரும் பா.ஜக தலைவரின் வாரிசுதான். பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 சதவீதம் அளவுக்கு முன்னாள் பாஜக எம்.பிக்கள், தலைவர்களின் வாரிசுகள்தான் இருக்கிறார்கள்.
மதிமுகவைப் பொறுத்தவரை நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. நிர்வாகிகள், தொண்டர்களால் இழுத்துவரப்பட்டவன். நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதன் மூலம் கட்சிக்கு ஏதாவது செய்ய முடியும் என்னும் எண்ணத்தில் போட்டியிடுகிறேன்.
இன்றைக்கு ஈ.டி. வருமான வரித்துறை சிபிஐ தேர்தல் ஆணையம்எல்லாமே மோடியின் கட்டுப்பாட்டிலேதான் உள்ளது. அதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக இருக்குமா? தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுமா? தேர்தல் ஒழுங்காக நடக்குமா? என்னும் சந்தேகங்கள் எல்லா அரசியல் கட்சிகளுக்கு எழுந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் திமுக அரசு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்ய உள்ளோம். அதே நேரம் பா.ஜகவின் மதவாத அரசியல் குறித்து எடுத்துச் சொல்லி முன்னேற்ற அரசியலுக்கான பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.
மின்னணு தேர்தல் முறை என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக உள்ளது.இந்த தேர்தல் பா.ஜகவுக்கு கடினமான தேர்தலாகி உள்ளது. இந்தியா கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.