ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வால் பீதி அடைந்த மக்கள், அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதிகாலை 4.09 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அரை மணி நேர இடை வெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4.09 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 4.22 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கமும், அடுத்த மூன்று நிமிடங்களில் (4.25 மணிக்கு) 3-வது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி இருந்தது.