பசும்பொன்னிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்கக் கூடாது என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் சட்ட கல்லூரி மாணவர்கள் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட கல்லூரி மாணவர்கள் அளித்துள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வருகிறோம். கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டார்
மேற்கண்ட அரசாணையால் மிகவும் பிற்படுத்தப்பட்ட 118 சாதிகளும் 68 சீர்மரபினர் சாதிகளும் பெரிதும் பாதிப்படைந்தனர். மேற்படி அரசாணையினால் முக்குலத்தோரில் கள்ளர் மற்றும் மறவர் சமுதாயத்தினர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேற்கண்ட அரசாணையினை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் வருகின்ற 30.10.2023-ம் தேதியன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.
மேற்படி நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வருகிறது. மேற்கண்ட அரசாணையினால் பாதிப்படைந்த முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கும் அவ்வரசாணையினை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வர வாய்ப்புள்ளது.
ஆகவே, அமைதியான முறையில் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை நடைபெற மேற்படி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 30.10.2023-ம் தேதியன்று அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜையில் கலந்து கொள்ள அனுமதி அளிக்காமல் சட்டம்-ஒழுங்கினை பாதுகாத்து அமைதியான முறையில் குருபூஜை நடத்தி தருமாறு தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.