ஈரோட்டில் கரு முட்டை விற்ற வழக்கு தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் தனியார் மருததுவமனையில் விசாரணை மேற்கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இதனிடையே இந்த கரு முட்டை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் சென்னை மருத்துவ உயர் மட்ட குழுவினர் விசாரித்தனர்.
இது குறித்து தெரிவித்த மருத்துவத் துறை அதிகாரிகள் ஈரோட்டில் கருமுட்டை விற்ற வழக்கில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் விசாரணை செய்து இருக்கிறோம் இதுதவிர சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்தவமனைகளில் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
கரு முட்டை விற்ற வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஈரோடு, சேலம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.