மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மாநில வாரியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.