சென்னையில் 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அதனை வாங்க மறுத்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பைக்கில் நிரப்பிய பெட்ரோலை திரும்ப உறிஞ்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும், அவற்றை செப்டம்பர் மாதத்திற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், பலரும் வங்கிகளில் கொடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள், பைக்கில் நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், அதேபோல், ஒரு சம்பவம் சென்னையிலும் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 31 வயதாகும் ஹரி பிரசாத் என்ற நபர் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
அப்போது, தன்னிடம் சில்லரை இல்லாததால் பெட்ரோல் நிலைய ஊழியரிடம் 2,000 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், அதனை பெட்ரோல் நிலைய மேலாளர் வாங்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கும், ஹரிபிரசாத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெட்ரோல் நிலைய மேலாளர் சில்லரை இல்லாவிட்டால் பைக்கில் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்துவிடு என்று ஊழியரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த ஊழியர் பெட்ரோலை திரும்ப உறிஞ்சி எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.