ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சிஆர்பிஎப்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சிஆர்பிஎப் அமைப்பின் ‘கோப்ரா’ கமாண்டோக்கள் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் நேற்று அதிகாலை முதல் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் என்கவுன்ட்டர் நடந்த இடத்திலிருந்து 1 ஏ.கே. ரக துப்பாக்கி, 3 ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகள், 1 எஸ்எல்ஆர் துப்பாக்கியை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
மாவோயிஸ்ட் அமைப்பை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக போரிடுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு பிரிவை சிஆர்பிஎப் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.