ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் என இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அத்தொகுதி மக்களிடையே கருத்துக்கணிப்பை நடத்திய ஆய்வு அறிக்கை சென்னை சேப்பாக்கத்தில் வெளியிடப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சுமார் 1761 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் 45% பெற்று முதலிடமும் அதிமுக 39.52% பெற்று இரண்டாவது இடமும் நாம் தமிழர் கட்சி 9.51% பெற்று மூன்றாவது இடமும் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகளுக்கு 59% பேர் வரவேற்பும் 28% பேர் அதிக வெறுப்பும் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பதை 51% பேர் விரும்பவில்லை, 39% பேர் விருப்பம், 10% பேர் எதுவும் சொல்வதற்கில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு 49% பேர் ஆதரவும், 35% எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.சிறந்த எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்யும் தலைவர்களில் முதல் இடத்தில் அண்ணாமலையும் இரண்டாவது இடத்தில் எடப்பாடி பழனிசாமியும் மூன்றாவது இடத்தில் சீமானும் பெற்றுள்ளனர்.
ஆய்வு அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்த அமைப்பினர் இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் திமுக கூட்டணி 130 கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் பணம்தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்டதற்குப் பின்னணியில் உள்நோக்கம் உள்ளதாஎன்று கேட்டதற்குக் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் குறித்து கேள்வி கேட்டதாக மழுப்பலான பதிலை அளித்தார்.