ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 7-ஆம் தேதியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. இதில் 96 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை தொடர்ந்து வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.