முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் (K.B.Anbalagan) மருமகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்க் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
அ.தி.மு.க-விலும், அமைப்புச் செயலாளர் – தருமபுரி மாவட்டச் செயலாளர் பதவிகளை வகிக்கிறார். காரிமங்கலம் அருகே கெரகோட அள்ளி கிராமத்தில் கே.பி.அன்பழகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரின் மருமகள் பூர்ணிமா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அன்பழகனுக்கு சந்திரமோகன், சசிமோகன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இளைய மகன் சசிமோகனுக்கும், சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் பூர்ணிமாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
இதையும் படிங்க : Vijay meet : நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்-நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை!
இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றினார். அப்போது அவருடைய ஆடையில் தீப்பிடித்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில், பணிப்பெண் ஒருவரும் வீட்டில் இருந்திருக்கிறார்.
இதனால் 80 சதவீதம் தீக்காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு கவலைக்கிடமான நிலையில் இருந்த பூர்ணிமா கடந்த ஒரு வாரகாலமாக தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சைப் பெற்றுவந்த நேரத்திலேயே, மாஜிஸ்திரேட் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுவிட்டது.
இதனிடையே, உயிரிழந்த பூர்ணிமாவின் உடல் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனைச் செய்யப்படுகிறது. கே.பி.அன்பழகனின் (K.B.Anbalagan) குடும்பத்தினருக்கு அ.தி.மு.க-வினர் பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சரது மருமகளின் இறப்பு குறித்த செய்தி அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.