தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை, ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு (sanjita sanu) 4 ஆண்டு தடை விதித்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இந்திய பளு தூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு (sanjita sanu), தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த நிலையில், கடந்த ஆண்டு குஜராத்தில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் தேசிய போட்டிகள் நடந்த போது, செப்டம்பர் 30 ஆம்தேதி சஞ்சிதாவிடம் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அதில், துரோஸ்டானோலோன் மெட்டபோலைட் என்ற ஊக்க மருந்து தடுப்பு கழகம் தடை செய்த பட்டியலில் இடம் பெற்ற ரசாயன பொருளை சஞ்சிதா பயன்படுத்தி இருந்தது உறுதியான நிலையில், அவருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை 4 ஆண்டு தடை விதித்து உள்ளது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து, 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய சஞ்சிதா சானுவுக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய விளையாட்டு போட்டியில் சஞ்சிதா பெற்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என கூறப்படுகிறது.