அதிக வட்டி தருவதாக நம்ப வைத்து 26 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா, பின்னர் பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும், இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கியதாகவும் சினேகா குறிப்பிட்டுள்ளார்.
முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்து தன்னை மிரட்டியதாக காவல்துறையில் அளித்துள்ள புகாரில் நடிகை சினேகா மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பணமோசடி தொடர்பாக சினேகா அளித்த புகார் குறித்து கானாத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.