மதுரை அருகே கோவில் பாப்பாகுடி எனும் கிராமத்தில் திடீரென உடல் நலக்குறைவால் காலமான ஜல்லிக்கட்டு காளை ராமு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகருக்கு உட்பட்ட கரிசல்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடுபிடி வீரர் தீபக். இவர் பத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகள் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் மட்டுமின்றி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளன.
தான் வளர்த்து வரும் அனைத்து காளைகளையும் தன் உடன் பிறந்த தம்பிகளாக கருதி போற்றி வரும் தீபக்கின் காளையான ராமு நேற்று பிற்பகல் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது. இந்நிலையில் ராமு உயிர் இழந்த தகவலை ஊரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவித்து, அவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மனிதர்கள் இருந்தால் என்ன மாதிரியான சடங்குகள் மதுரை பகுதியில் மேற்கொள்ளப்படுமோ அதே போன்ற சடங்குகளை இறந்த ஜல்லிக்கட்டு காளை ராமுவுக்கும் தீபக் செய்து வருகிறார். தகவல் கேள்விப்பட்டு மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களைச் சார்ந்த மாடுபிடி வீரர்களும் காளை வளர்ப்போரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
இது குறித்து மாடுபிடி வீரர் கரிசல்குளம் தீபக் கூறுகையில், ‘இன்று என் வாழ்க்கையின் பெரிய துக்க நாள். நான் பிள்ளையைப் போன்று வளர்த்து வந்த காளை ராமு இயற்கை எய்தி விட்டது. அதற்கு வயது 22. இது சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டி என்ற ஊரில் பிறந்ததாகும். சிவகங்கை சேர்ந்த எனது அண்ணன் கிளாதிரி கிருஷ்ணன் என்பவர்தான் கடந்த 2001ஆம் ஆண்டு ராமு காளையை வாங்கினார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ராமு காளை களத்தில் இறங்கி விளையாட தொடங்கியது. வடமாடு மஞ்சுவிரட்டில் மிக அனுபவம் வாய்ந்ததாகும். இந்த காளையை கடந்த 12 ஆண்டுகளாக நான் வளர்த்து வருகிறேன். வடமாடு ஜல்லிக்கட்டில் எனக்கு பல பெயர்களை வாங்கித் தந்த காளை. நான் காலை வளர்ப்பில் மிகுந்த அக்கறை காட்டுவதற்கு காரணம் கரிசல் குளம் மற்றும் கோவில் பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த எனது தம்பிகள் தான் காரணம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் வடமாடு விளையாட்டிற்கு ஒரு காளையை தயார் படுத்துவதும் வாடி வாசலில் இறங்கக்கூடிய 10 காளைகளை தயார்செய்வதும் ஒன்றுதான். வடமாடு மஞ்சுவிரட்டில் 10 வீரர்களிடம் ஏறக்குறைய 25 நிமிடங்கள் ஒரு காளை நின்று விளையாடுகிறது என்றால் அதற்குப் பின்னால் உள்ள உழைப்பு மிக உன்னதமானது.
ராமு காளையை எனக்கு வழங்கிய கிருஷ்ணனிடம் இருக்கும்போது 30-க்கும் மேற்பட்ட வடங்களில் விளையாடியது. அவரிடமிருந்து அந்தக் காளையை வாங்கி வந்து தற்போது வரை சிறப்பாக வளர்த்து வந்தேன். என்னிடம் வந்ததுக்கு பிறகு ராமு காலை 35 வடங்களுக்கு மேல் களத்தில் இறங்கி விளையாடி உள்ளது. பல சிறந்த வீரர்களோடு விளையாடி வெற்றி பெற்றுள்ளது அதே சமயம் வீரர்களும் ராமு காளையை வெற்றி பெற்றுள்ளனர். விளையாடி 35 வடங்களில் ஐந்து வடங்களில் தோல்வியுற்றாலும் 30 வருடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்த காளை தான் ராமு. காளை ராமுவின் இறப்பு கரிசல்குளத்திலும் கோவில் பாப்பாகுடி கிராமத்திலும் தாங்க முடியாத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமாடு மஞ்சுவிரட்டு விளையாட்டுக்கே ராமு காளை பேரிழப்பாகும். இன்றைக்கும் அதன் விளையாட்டு ரசிக்கக்கூடிய தீவிர ரசிகர்கள் உண்டு. தற்போது ராமு காளை காலமானது எங்களுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது. எங்களோடு உடன் பிறந்த சகோதரனைப் போல் உறவாடிய அந்த காளைக்கு, மனிதர் இறந்தால் என்ன விதமான இறுதி சடங்குகளை மேற்கொள்வோமோ அதே போன்ற சடங்குகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். ராமு காளையின் இறப்பிற்காக இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வருகை தந்துள்ளனர் அவர்களையெல்லாம் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியாது. எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் ராமு காளையின் இறப்பு பேரிழப்பு தான் என்றார்