தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வி.சி.க-வின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திருமாவளவன் நேற்று காந்தியை தவிர்த்து விட்டு காமராஜருக்கு மட்டும் மரியாதை செலுத்தியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக தமிழிசை கூறும்போது,
“இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்று ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கு மது ஒழிப்பு மாநாடு என்பது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.
திருமாவளவன் காந்தியைத் தவிர்த்து விட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி தான். ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று தான் எனக்கு புரியவில்லை.
ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ? நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரா என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : மதுவை ஒழிக்க முடியாது எனில் பதவி விலகுங்கள் – அன்புமணி ராமதாஸ்!
இந்நிலையில், மாநாட்டில் உரையாற்றிய திருமாவளவன் தமிழிசை கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது:-
“காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, ஆளுநர் வந்த பிறகு மாலை அணிவிக்க சொன்னார்கள். நான் உளுந்தூர்பேட்டைக்கு செல்ல நேரமாகிவிடும் என்பதால் காமராஜர் மண்டபத்திலேயே அணைத்து மலைகளையும் வைத்து, அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வந்தேன்.
ஆனால் முன்னாள் ஆளுநர் தமிழிசை, திருமாவளவன் காந்தியை அவமதித்துவிட்டார், காந்தி மதுஒழிப்புக்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை. ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ? என்று கூறியிருக்கிறார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடியவர் என்று சொல்கிறார்.
அக்கா தமிழிசை நீங்கள் குடிக்க மாட்டீர்கள்; உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போன்றுதான் நானும், எனக்கு அந்த பழக்கம் இல்லை. அயல்நாடுகளுக்கு பயணம்செய்துள்ளேன் என் வாழ்நாளில் ஒரு முறை கூட அதை தொட்டதில்லை. இதை தமிழிசைக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.