ஒரு தக்காளிக்காக கணவன் – மனைவி சண்டை போட்டு பிரிந்த பரபரப்பு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
அன்றாடம் சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை ₹ 100 தாண்டி விற்பனை ஆகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் ஒரு தக்காளி வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட தக்காளியினால் பல பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. அந்த வகையில் தற்போது தக்காளியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ள அவலம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஹ்டோல் என்ற பகுதியை சேர்ந்த சஞ்சீவ் பரமன் ஒரு டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சமையல் செய்யும்பொழுது தனது மனைவியின் பேச்சை கேட்காமல் உணவில் இரண்டு தக்காளிகளை கூடுதலாக சேர்த்துள்ளார்.
இது அவரது மனைவிக்கு தெரிய வந்த நிலையில், அவர் ஆத்திரத்தில் தக்காளியின் விலை கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. என் பேச்சைக் கேட்காமல் இப்படி தக்காளிகளை ஏன் அதிகமாக குழம்பில் சேர்த்தீர்கள்? என்று சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்களின் சண்டை முற்றிய நிலையில், சஞ்சீவிடம் அவரது மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை வெளியேறி உள்ளார். மேலும், அவருடன் தனது மகளையும் அழைத்துச் சென்று தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்ற கவலையில் கணவர் சஞ்சீவ் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கவலைப்படாதீர்கள் உங்கள் மனைவி விரைவில் கோபம் தீர்ந்து வீட்டிற்கு வந்து விடுவார் என்று அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பிவைத்துள்ளனர்.
ஒரு தக்காளிக்காக கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்ட நிலையில், கோபத்தில் மனைவி தாய் வீட்டிற்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.