மத்திய பிரதேச மாநிலத்தில், மொரினா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரண்டு போர் விமானங்கள் (Fighter planes) எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது, குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு இரண்டு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுகோய்-30 போர் விமானத்தில் இரண்டு விமானிகளும், மிராஜ் 2000 போர் விமானத்தில் ஒரு விமானியும் இருந்த நிலையில், இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, விபத்துக்குள்ளான விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், விமானப்படை தளபதி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், விபத்துக்குள்ளான சுகோய்-30 போர் விமானம் (Fighter planes) ரஷ்யாவிலும், மிராஜ் 2000 போர் விமானம் பிரான்ஸிலும் தயாரிக்கப்பட்டது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் எதிர்பாராமல் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.