தெலங்கானா மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பிரசவம் பார்த்த மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஸ்ரீகாக்குளம் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் செகந்தராபாத் டுரோண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் அனகபள்ளி ரயில் நிலையத்தை அடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிகாலை 3.30 மணியளவில் திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் பதறி போன கணவர் செய்வதறியாது அந்த ரயில் பெட்டியில் இருந்த பெண்களிடம் விவரத்தை சொன்னார். அதிர்ஷ்டவசமாக மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு மாணவி ஸ்வாதி ரெட்டி அதே ரயில் பெட்டியில் பயணித்தார். பெண்ணின் கணவர் தகவல் சொன்னவுடன் மருத்துவ மாணவி ஸ்வாதி, அருகில் இருந்த மற்ற பெண்களோடு சேர்ந்து பிரசவம் பார்க்கும் வேலையில் இறங்கினார். சிறிது நேரத்தில் குழந்தையும் பிறந்தது.
பிறகு ரயில் அனகபள்ளி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மருத்துவமனையில், தாய் மற்றும் குழந்தையை அனுமதித்தனர். தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அதிகாலை 3.30 மணிக்கு துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ மாணவிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் மாணவியின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து மழையை பொழியச் செய்து வருகின்றனர்.